Wednesday, August 21, 2013


















ஜீவா 107 வது பிறந்த நாள் (21-08-2013)

ஜீவா என்ற பெயரில் என்றும் உயிர் உண்டு. அவர் அரைகுறை அரசியல்வாதி அல்ல. முழுமைபெற்ற சமதர்வாதி. இக்கால அரசியல் ஊழல் பெருச்சாளிகள் ஜீவா என்ற பெயரைச் சொல்லக்கூட அருகதை அற்றவர்கள். மாசற்ற மனித நேயச் சிந்தனைக்குச் சொந்தக்காரரான ஜீவா நல்ல தமிழ் உள்ளங்களில் என்றும் நிறைந்திருக்கிறார். ஜீவாவின் சிந்தனைகள் தமிழ் நெஞ்சங்களில் விதைக்கப்பட்டால்தான் தமிழக அரசியலில் தூய்மையான நாற்றங்கால்கள் தோன்றும். சுரண்டல் கலாசாரத்தை வளர்க்கும் சுயநலக்காரர்கள் ஒழிவார்கள். லஞ்சலாவண்ய சமூக விரோதிகள் அழிவார்கள்.

===============================================================

பகுத்தறிவுக்கு ஒரு பாதிரி – பி.ஸ்ரீ

‘தனித் தமிழ் தந்தையாகிய’ மறைமலையடிகளின் வாழ்க்கைத் துணுக்குகள் தமிழ்நாடெங்கும் பரவியிருந்த காலம் அது. அவரைக் கர்வம் பிடித்தவர் என்று சொல்லத் துணிந்தார் ஒருவர். அவர் காதிலே விழும்படி. மறைமலை அடிகளுக்குக் கோபம் வரவில்லை. “அந்தோ! இவருக்கு என்னைத் திட்டுவதற்குக்கூட ஒரு தனித்தமிழ்ச் சொல் கிடைக்கவில்லையா?” என்றுதான் வருந்தினார். “கர்வத்திற்குப் பதில் ஆணவம் என்ற சொல்லை உபயோகித்து வைத்திருக்கலாமே!” என்று கூறினார்.’முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பாய்’ என்று முருகக் கடவுளைப் போற்றுவதுண்டு. தூய தனித்தமிழால் வைதாரையும் வாழ்த்தலாம் எனக் கருதியது மறைமலையடிகளின் உள்ளம் இத்தகைய துணுக்குகளைக் கேட்டுப் பரவசமாயின சில தமிழுள்ளங்கள். ஒரு காலத்தில் நானும் (சொற்ப காலத்திற்குத்தான்) அக் குழுவினருள் இடம் பெற்றிருக்கிறேன்.

மேலே சொன்ன துணுக்கு, தனி உடைமையின் தனிப் பெரும் பகைவரான ஜீவாவின் காதிலும் விழுந்தது. “இத்தகைய தனித்தமிழரைப் பார்க்க வேண்டும்!” என்ற ஆசை எழுந்தது. இவர் தமது பெயரையும் தனித் தமிழில் ‘உயிர் இன்பன்’ என்று மாற்றி வைத்துக்கொண்டார்.


பேச்சாளர் ஜீவா

ஜீவாவின் பேச்சு ஜீவனுள்ள பேச்சு, “மாற்றார்க்கு வாள் வீச்சு” என்கிறார் அருகில் உள்ள தோழர் (காஞ்சி அமிழ்தனார்). தனித்தமிழ் தென்றலென வீசும். ஆனால் வாளாகுமா? சில சமயங்களில் பேச்சிலே பீரங்கிகள் வெடித்து முழங்குவதையும் கேட்கலாம்.

சாதிக் கொடுமையைச் சாடும் போதும், ஏகாதிபத்தியத்தின் முதலைப் பிடிப்பை சின்னாபின்னமாக்கிப் பேசும் போதும், “இதில் எது தமிழ் எது வட சொல்?” என்று நினைக்கத்தான் நேரம் எங்கே? எல்லாவற்றுக்கும் மேலாக தொழிலாளி – முதலாளி வர்க்கப் போராட்டத்தை அகக் கண்ணுக்கு இலக்காக்கும்போது இவரது பகுத்தறிவு பளிச்பளிச்சென்று மின்வெட்டும்; சொற்கள் ஜீவ வேகத்துடன் (ஜீவாவிற்கே உரிய தனி வேகத்துடன்) பூசலிட்டு ஓசையிடும்!

ஜீவாவுக்கு ஒருவித கவித்துவ சக்தியும் உண்டு. ஆனால் அது ஒரு முரட்டுக் கவிதை! அனலைக் கக்கும் கவிதை- அமிழ்தம் பொழியாது அத்தகைய கற்பனைச்சிறப்புடன் போராடும் இவரத பேச்சுத் தமிழுக்குச் சீராடத் தெரியாது. இத்தகைய நடையில் தொழிலாளியின் உழைப்பு வருணிக்கப் படுவதையும், இந்த உழைப்பால் நாகரிகம் வளர்ச்சி பெற்றிருப்பதையும், அத்தகைய பாட்டாளி மக்கள் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, படுக்க இடமின்றி தவிப்பதையும் கண்டு, கேட்டு அப்படியே உருகிப் போயிருக்கிறேன் பல சமயங்களில்.

ஜீவாவின் பேச்சிலே சப்த ஜாலங்கள் ஓலமிடுவதேயில்லை. இடியும் மின்னலுமாகி வெள்ளமிட்டுக் கருத்தாழத்தோடும் உணர்ச்சிப் பிரளயமாகப் பொங்கி வரும் சொற்களும் சொற்றொடர்களுமாக வெளியிடப்பட்ட வண்ணமாக இருக்கும்.

ஜீவாவின் பேச்சை காங்கிரஸ் மேடைகளிலும் கேட்டிருக்கிறேன்; சுயமரியாதை மேடைகளிலும் கேட்டிருக்கிறேன். இவரது தனி ராச்சியமான பொது உடைமை அரங்குகளிலும் கேட்டிருக்கிறேன். பெரும்பாலும், தரம் குன்றாத பேச்சுகள் அவை. இடிக்குரலில் போலி வாதங்களை அநாவசியமாக சிதறடிப்பார். கேட்போரை ஒரே உலுக்காக உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உலுக்கிக் குலுக்கி விடுவார். ஜீவா தமிழ் சூறாவளிக் காற்று. கொதித்து கொந்தளித்து எரிமலை கக்கும் நெருப்புக்குழம்பு!


வாழ்க்கையும் தொண்டுகளும்

தமிழகத்தின் தென்கோடியில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குக்கிராமத்திலே பிறந்தவர் ‘சொரிமுத்து’ என்ற வினோதப் பெயருடன் வளர்ந்தவர் – ஜீவானந்தம் என்ற பெயரால் புகழ் பரப்பியவர். தொழிலாளர் இயக்கத்திற்கும பொதுவுடைமைத் தத்துவத்திற்கும் ஜீவ நாடியாக துடித்து, சமதர்ம்ப் பெருந்தொண்டுகள் புரிந்து, தம் கொள்கைகளுக்காகப் போராடி வாழ்கைக் களத்தில் வீர மரணம் எய்தினார். இது ஒரே வாக்கியத்தில் ஜீவாவின் கதை.

இவரது அரசியல் பிரவேசமும், தனித்தமிழ் முழக்கமும் சுயமரியாதைக் கர்ச்சனையும், தேசீய ஆவேசமும் எல்லாம் இவரைக் கம்யூனிசப் பாதையில் திரும்பிச் சமதர்ம சமுதாயக் குறிக்கோளை நோக்கிச் செலுத்தி விட்டன. இதற்குப் பரிசு தடியடியும் மாறி மாறி சிறைவாசமும், நாடு கடத்தலும் ஆகிய ஒரே பயங்கர வாழ்வு! பயங்கரம் பார்ப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும்தான்; இவருக்கல்ல.
இவரது மற நெஞ்சு சிறைச்சாலையையும் தவச்சாலையாக்கிக் கொண்டது. சித்திரவதைகளையும் இலக்கியச் சித்திரங்களாகக் காட்டியது. இத்தகைய வாழ்க்கையில் தோல்விக்கு இடமெங்கே?

-’நான் அறிந்த தமிழ்மணிகள்’(கட்டுரை’, ‘சுதேசமித்திரன்’,
ஆகஸ்டு 9, 1969.



No comments: