Wednesday, August 14, 2013

சுதந்திர இந்தியா - யாருக்கு ?

இந்தியா சுதந்திரமடைந்து, அதாவது, தன்னாட்சி பெற்று 66 ஆண்டுகள் நிறைவுறுகிறது. சுதந்திரத்திற்காக போராடியோர் தள்ளாடும் வயதைக் கடந்துகொண்டிருக்கும் வேளையில், சுதந்திரத்தைப் பற்றி உணர்ச்சியூட்டும் வகையில் எழுதப்பட்ட வரலாறுகளை மட்டுமே படித்த இளைஞர்கள் மற்றும் பேரிளைஞர்கள் கூட்டம் உள்ள நாடாக இந்தியா உள்ளது.India Fortஇந்தியாவில் இருந்து புற்றீசல்போலப் புறப்பட்டு உலகெங்கும் சென்ற இந்தியர்கள் (குரு படத்தில் கடைசியில் "We, Indians, are coming" என்று சொல்வது போல), பணத்தை மூட்டையாகக் கட்டிக்கொண்டு பலநாட்டு நிறுவனங்களை வாங்கிக் குவிக்கும் இந்திய நிறுவனங்கள், உலகிலேயே மிகப்பெரிய எண்ணை சுத்திகரிப்பாலையை நிர்மாணிப்பது, உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் எலக்ட்ரானிக் முறையில் ஓட்டுப் போடுவது (இன்னமும் பல மேற்கத்திய நாடுகள் பேப்பரில்தான் ஓட்டுப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்), எகிறும் நில மற்றும் கட்டிட விலைகள், என்று ஒரு பக்கமும்; மறுபக்கத்தில் தீரவே தீராத காஷ்மீர் பிரச்சினை, சரியான சாலைகள் பாலங்கள் அமைந்திராத கிராமங்கள், ஆந்திராவில் நக்ஸலைட்கள், அஸ்ஸாமின் உல்பா, ஆர்எஸ்எஸ் மற்றும் இன்னபிற மத தீவிரவாத அமைப்புகள், இன்னமும் வறுமைக்கோட்டில் இருக்கும் மக்கள், மாநிலங்களுக்கிடையேயான நதிநீர்ப்பங்கீட்டுப் பிரச்னை மற்றும் ஏனைய பிரச்னைகள் என்று கதம்பமாக இந்தியாவின் 67 ஆண்டு சுதந்திர தினம் பிறந்திருக்கிறது.

66 ஆண்டுகளில் நாம் மிகப்பெரிய அளவில் வளர்ந்திருக்கிறோம் என்பதை மறுக்க முடியாது. சிங்கப்பூரை இணைவைத்துப் பார்த்தோமானால், இவ்வளவு நீண்ட காலம் என்பது நம் நாட்டின் எல்லையைப் பொறுத்து ஒருவகையில் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். அதே சமயம் அமெரிக்கா சுதந்திரம் வாங்கிய 60 ஆண்டுகளில் இந்த அளவிற்கு வளர்ந்திருக்கவில்லை என்பதையும் நினைவுறுத்த வேண்டும்.

1947-ல் சுதந்திரம் வாங்கியபின் 1950-ல் குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்டு 62 வருடங்கள் ஜனநாயக ஆட்சி நடந்து வருகிறது (இடையில் சிலகாலங்கள் நெருக்கடி நிலைப் பிரகடனம் தவிர்த்து). பொருளாதார முன்னேற்றம் என்று பார்த்தால் 1990க்குப் பிறகு தொடர் வளர்ச்சிதான், ஆனால் அதற்கான ஆயத்தங்கள் 1980களிலேயே ஆரம்பித்துவிட்டது என்றால் பொய்யில்லை. வெகுகாலத்திற்கு, யானை போன்ற இந்தியா படுத்தே இருந்ததால் பல நாடுகள் இந்தியாவைப் பொருட்படுத்தவேயில்லை. ஆசியான் அமைப்பின் பாங்காக் டிக்ளரேஷனில்கூட இந்தியாவை குட்டியூண்டு நாடுகள் பொருட்படுத்தி அழைக்கவில்லை.

1990களில் நரசிம்மராவ், மன்மோகன்சிங் மற்றும் சிதம்பரம் கூட்டணி இந்தியாவை ஒரு புதிய பாதையை நோக்கி செலுத்தத் தொடங்கியபோது, படுத்திருந்த யானை எழுந்தாற்போல இருந்தது. இன்றைக்கு இந்தியாவைப் பற்றி சிந்திக்காத பேசாத பொருளாதார அரசியல் வல்லுநர்கள் இல்லை. அதாவது, யானை தரையதிர ஓடத் தொடங்கியிருக்கிறது. அனைவரும் திரும்பிப் பார்க்கிறார்கள்.

மறுபக்கம் இந்தப் பொருளாதார முன்னேற்றம் எல்லா அடித்தட்டு மக்களுக்கும் போய்ச் சேர்நதிருக்கிறதா என்றால், (வருத்தமாகத்தானிருக்கிறது,) இல்லை எனலாம். இன்றைக்கும் 70 கோடிக்கு மேலானோர் தினமும் 4 டாலர் வருமானமும் அதற்கு கீழேயும் பெறும் வறுமையில் இருக்கின்றனர். அரசிடம் இவர்களுக்கான திட்டங்கள் இருக்கின்றனவா என்பது கேள்வி. ஆம், இருந்தன, இருக்கின்றன. உண்மையில் இப்படிப்பட்ட மக்களுக்கான திட்டங்கள் பெரும்பாலும் 'இலவசங்களாக'வே மக்களுக்கு அளிக்கப்பட்டன. அவற்றிலும் கைமாறிச் செல்லும் பனிக்கட்டியாய் துளி மட்டுமே அடித்தட்டு மக்களுக்குப் போய்ச் சேர்ந்தது.

அரசியல்கட்சி வளர்க்கும் சுயநலம் மேலிட்டதால், மக்களை சுயசார்புள்ளவர்களாக ஆக்குவதை விட்டு விட்டு கையேந்திகளாகவே வைத்திருக்கிறார்கள். மக்களும் அரசு இலவசமாகத் தரவேண்டும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர். புரா போன்ற இன்னபிற சுய உதவிக்குழுக்கள் இந்த மாற்றத்தைக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியிருப்பதை அரசு இயந்திரம் முழு மூச்சில் என்றைக்கு தனது கொள்கையாக கொண்டு வருமோ அன்றுதான் இந்த இலவச எதிர்பார்ப்பு மனநிலை ஒழியும். ஒவ்வொரு குடும்பமும் தன்னிறைவுறும். மைக்ரோ ஃபைனான்ஸ் என்கிற அருமையான உத்தி கந்து வட்டியாளர்களை விரட்டிவிடும். ஆனால் எத்தனைபேர் இன்று மைக்ரோ ஃபைனான்ஸ் செய்கிறார்கள், எத்தனைபேருக்கு அப்படி ஒன்று இருப்பது தெரிகிறது.

காலம் மாறும். இன்றைக்கு நிறைய இளைஞர்கள் குறுகிய காலத்தில் தேவைக்கும் அதிகமாகச் சம்பாதித்து விட்டு தன் சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நமைச்சலுடன்(?) திரிகிற அவர்களை ஒருங்கிணைத்தால் ஒரு பெரிய சமுதாய பொருளாதார மாற்றத்தை இந்தியாவில் கொண்டு வரமுடியும் !

No comments: