Friday, December 6, 2013


நெல்சன் மண்டேலா மரணம்
 தென்னாப்ரி்க்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா காலமானார்
நமது வீர வணக்கம்!
தென் ஆப்ரிக்காவின் சுதந்திர போராட்ட வீரரும்,கறுப்பின தலைவருமான நெல்சன் மண்டலோ தனது 95-வயதில் காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். அவரின் மரணம் குறித்து தற்போதைய அதிபர் ஜேக்கப் ஜூமா முறைப்படி அறிவித்தார்.
உலகத்தலைவர்: தென்னாப்ரிக்காவின் 80 ஆண்டு இனவெறிக் கொள்கையை எதிர்த்து நீண்டதொரு போராட்டம் நடத்தி, அதில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் அந்நாட்டுக்கே அதிபராகி வரலாற்றில் இடம் பிடித்தவர் மண்டேலா. உலகளவில் 250 விருதுகளை பெற்றுள்ளார். அதில் 1993ல் அமைதிக்கான நோபல் பரிசும் ஒன்று. 1918 ஜூலை 18ல் தென்னாப்ரிக்காவின் டிரான்ஸ்கே பகுதியில் பிறந்த மண்டேலாவின் இயற்பெயர் ரோலிஹ்லாஹ்லா. இவரது தந்தை தெம்பு மக்கள் இனத்தலைவராக (அரசராக) இருந்தார். பள்ளியில் மண்டேலாவுக்கு "நெல்சன்' என்ற பெயர் சூட்டப்பட்டது. தந்தை மரணத்திற்குப் பின் மண்டேலா தம் இனத்தின் அரசரானார். "போர்ட்ஹாரே' பல்கலைக்கழகத்தில் படிக்கும் போதே இனவெறியை எதிர்க்க தொடங்கினார். 1944ல் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இளைஞர் லீக்கை உருவாக்கினர். 1952ல் சட்டப்படிப்பை ¬முடித்து, "முதல் கருப்பர் வழக்கறிஞர்' அலுவலகம் திறந்தார். வழக்கறிஞராக பணியாற்றும்போது நீதித்துறையில் காணப்பட்ட நிறவெறியைக் கண்டு கோபமுற்றார்.
ஆயுள் தண்டனை: ஆப்ரிக்க தேசிய காங்கிரசும், கம்யூனிஸ்ட் கட்சியும் ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்கின. இதனை கண்டு அஞ்சிய வெள்ளையின அரசு 1950ல் கம்யூனிஸ்ட் கட்சியைத் தடைசெய்தது. 1956ல் மண்டேலா உட்பட 156 அரசியல் போராட்டக்காரர்கள் தேசத்துரோக வழக்கில் கைதாகினர். 4 ஆண்டு விசாரணைக்குப் பின் விடுதலை செய்யப்பட்டனர். அப்போதுதான் "ஷார்ப்பிவில்லி படுகொலை'' நிகழ்ந்தது. அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்த ஆப்ரிக்கர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் 69 பேர் கொல்லப்பட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த மண்டேலா "உம்கோண்டோவி சிஸ்வி'' என்ற அமைப்பை நிறுவினார். நாச வேலைகள், கொரில்லாப் போர் போன்ற பயங்கரவாத செயல்களில் அது ஈடுபட்டது. எனினும் அவர் "ஆயுதம் தாங்கிய போராட்டம் தவிர்க்க இயலாது ஆனால் தென்னாப்பிரிக்க பிரச்சினையின் இறுதித் தீர்வுக்கு வன்முறை வழி வகுக்காது'' என்ற கருத்தினைக் கொண்டிருந்தார்.  அரசு அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்தது. தென்னாப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தடை செய்யப்பட்டது. நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. மண்டேலா தேசத்துரோக வழக்கில் கைதானார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கல்லும் கரையும்: மண்டேலா கேப்டவுன் அருகே ரப்பன் தீவு சிறையில் அடைக்கப்பட்டார். இங்கு வெளி உலகத்தோடு எந்தவித தொடர்பும் கொள்ள முடியாது; அரசின் அடக்குமுறைகள், உலகில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. ஐ.நா., சபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பொருளாதார தடை தீர்மானம் இயற்றப்பட்டது. பல நாடுகள் தூதரக உறவைத் துண்டித்தன. உள்நாட்டில் இருந்த இடைவிடாத எதிர்ப்பும், வெளிநாடுகளின் பொருளாதார தடையும் கடைசியில் இனவெறி அரசின் கண்களைத் திறந்தன. 1990 பிப்., 11ல், 27 ஆண்டுகால சிறைவாசத்திற்குப் பின், 72வது வயதில் மண்டேலா விடுதலையானார்.
இந்தியாவும் மண்டேலாவும்: தென்னாப்பிரிக்காவின் நிறவெறிக் கொள்கையை எதிர்த்து முதலில் போராட்டம் தொடங்கியவர் மகாத்மா காந்தியடிகள் தான். மண்டேலாவுக்கு இந்திய அரசு மிக உயரிய "பாரத ரத்னா'' விருதளித்து கௌரவித்தது.

No comments: