Friday, November 28, 2014

புதுக்கோட்டை மாவட்டத்தில்  தொலைத்தொடர்பு துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம்

கடைநிலை ஊழியர்களின் ஊதியத் தேக்கத்திற்கு தீர்வுகாண வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொலைத் தொடர்புத் துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை தொலைத் தொடர்பு அலுவலகத்தில் நடந்த இந்த போராட்டத்துக்கு தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளன கிளைத் தலைவர் பி. முத்து, பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கக் கிளைத் தலைவர் கே. நடராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இதில் 1.1.2007-க்குப்பின் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களின் ஊதியக் குறைப்பை சரிசெய்ய வேண்டும். பதவி உயர்வு திட்டத்தில் நிர்வாகம் ஏற்படுத்தியுள்ள தடைகளுக்குத் தீர்வு காண வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பையும், குறைந்தபட்ச ஊதியத்தையும் உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த வேலைநிறுத்தம் போராட்டம் மாவட்டம் முழுவதும் நடைபெற்றது.

சிஐடியு தலைவர் மா. ஜியாவுதீன், ஏஐடியுசி தலைவர் திருநாவுக்கரசு, தொலைத்தொடர்பு துறை ஊழியர் சம்மேளனத்தின் மாவட்டத் துணைத் தலைவர் கே. ஆசைத்தம்பி, தொலைத்தொடர்பு துறை ஊழியர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலர் மு. மல்லிகா, சம்மேளனக் கிளைச் செயலர் ஆர். ராஜேந்திரன், ஊழியர் சங்கக் கிளைச் செயலர் பி. ஆறுமுகம், பிற தோழமைச் சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்று போராட்டத்தை விளக்கிப் பேசினர். கிளைத் துணைத் தலைவர் பி. ரெங்கராஜ் நன்றி கூறினார்.

No comments: