Tuesday, April 21, 2015

வியாதியை துரத்துவோம்! வேலை நிறுத்தத்தில் பங்கேற்போம்!!

தோழர்களே !
அரசின் கொள்கைகளால் வெகு வேகமாக நலிவடைந்து வரும் நமது நிறுவனத்தை தூக்கி நிறுத்தும் நோக்கத்திலேயே வரும் 21, 22 தேதிகளில் வேலை நிறுத்தம் நடத்தப்படுகிறது. BSNL-ல் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் அனைத்து சங்கங்களும் சேர்ந்து இந்த வேலை நிறுத்த அறைகூவலை விட்டுள்ளன. ஓரே ஒரு கோரிக்கை மட்டுமே பணியாற்றும் ஊழியர்களுக்கு. இரு கோரிக்கைகள் ஓய்வு பெற்ற நம் ஊழியர்களின் 78.2 சத கிராக்கிப்படி இணைப்பு மற்றும் ஓய்வூதிய மாற்றம் பற்றியன. மற்ற அனைத்துமே நமக்கு படியளக்கும் நிறுவனத்தின் நலன் காக்கும் கோரிக்கைகள். ஊழியர்களுக்காக முன் வைக்கப்பட்டிருக்கும் அந்த ஒரே கோரிக்கையும் 2000-க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களின் ஓய்வூதிய பலன்கள் 30 சதவீதமாக இருக்க வேண்டும் என்பதே.
கடந்த சில ஆண்டுகளாக நமது நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வந்த போதிலும் வருவாய் செலவை விட அதிகமாகவே இருந்தது. ஆனால், சென்ற ஆண்டு செலவைவிடவும் வருவாய் குறைந்து CASH DEFICIT நிறுவனமாகவும் BSNL மாறி உள்ளது. சம்பளம் வழங்கவும் மற்ற செலவுகளுக்காகவும் மாதா மாதம் BSNL கடன் வாங்குகிறது. இந்த நிலை நீடித்தால் BSNL நலிவடைந்த ஒரு நிறுவனமாக அறிவிக்கப்பட்டு, 3 மாதத்திற்கு ஒரு முறை, 6 மாதத்திற்கு ஒரு முறை என சம்பளம் வாங்க வேண்டிய நாள் வெகு தூரத்தில் இல்லை. NO CASH REFUND பாலிசியை கடைபிடிக்கும் கடைகளைப் போல், BSNL-க்கு திரும்பத்தர வேண்டிய 6700 கோடியை Licencee FEE-ல் கழித்துக் கொள்கிறேன் எனக் கூறிவிட்டு, வளர்ச்சிப்பணிகளுக்காக தேவைப்படும் 7000 கோடியை வங்கிகளில் கடன் வாங்கிக்கொள்ள சொல்கிறது அரசு.
இந் நிலையை ஓரளவேனும் மாற்றிட, கீழ்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து நமது சங்கங்கள் வேலை நிறுத்த அறைகூவலை விட்டுள்ளன.

 • BSNL வளர்ச்சிக்குத் தேவையான உபகரணங்களை உடனடியாக கொள்முதல் செய்.
 • கிராமப்புற சேவைக்கு உரிய சன்மானம் வழங்கு.
 • BSNL சேவை விரிவாக்கத்திற்கு உரிய நிதி உதவி செய்.
 • BSNL மற்றும் MTNL இணைப்பை நிறுத்து.
 • TOWER CORPORATION போன்ற துணை நிறுவனங்களை ஏற்படுத்தாதே. BBNL நிறுவனத்தை BSNL உடன் இணைத்திடு .
 • 1.2 MHz அலைவரிசையை ஒப்படைக்க கோரும் TRAI-ன் மோசமான பரிந்துரையை ரத்து செய்.
 • BSNL-ல் காலியாக உள்ள இயக்குநர் பதவிகளை நிரப்பு. 
 • BSNL பாத்தியத்தில் உள்ள அனைத்து சொத்துகளையும் BSNL-க்கு மாற்றம் செய்.
 • அலைவரிசை ஒப்படைப்பு பணம் 6700 கோடியை உடனடியாக திருப்பி வழங்கு.
 • மத்திய மாநில அரசு நிறுவனங்களில் BSNL சேவையைக் கட்டாயமாக்கு.
 • அலைவரிசை பயன்பாட்டை BSNLன் விருப்பத்திற்கு விடு.
 • ஊழியர் விரோத DELOITTE குழு பரிந்துரையை அமுல்படுத்தாதே.
 • BSNLக்கு இலவச அலைக்கற்றை வழங்கு. 
 • 4G சேவையை BSNL வழங்குவதற்கு வகை செய். 
 • ITI மூலம் உபகரணங்கள் வாங்குவதை கட்டாயமாக்காதே.
 • ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 78.2 சத IDA இணைப்பை வழங்கு.
 • ஊதிய மாற்றத்தின் போது ஓய்வூதிய மாற்றத்தையும் அமுல்படுத்து.
 • ஓய்வூதிய பங்களிப்பை வாங்கும் சம்பளத்தில் கணக்கிடு.
 • BSNL நேரடி ஊழியர்களுக்கு 30 சத ஓய்வூதியப் பலன்கள் வழங்கு.
 • புதிய ஊழியர்களை BSNLலில் நியமனம் செய்.

வேலை நிறுத்த நாட்கள் நெருங்க நெருங்க நம்மில் பலரைக் காணவில்லை. மருத்துவ விடுப்பில் சென்றுள்ளனர். இரண்டு நாள் ஊதியத்தைக் காப்பாற்றிக் கொள்ள விடுப்பில் செல்லும் அலுவலகங்களில் பணியாற்றும் சில அறிவாளிகளைத் தவிர்த்து, பல இளம் ஊழியர்களும் MC தருவது ஆச்சரியமாக உள்ளது. BSNL இன்னும் நீண்ட காலம் இருக்க வேண்டும் என்பது இந்த இளம் தோழர்களுக்கே பெரிதும் தேவை. இன்னும் 30 வருடங்களுக்கு மேல் சேவை உள்ளவர்கள் அவர்கள். தங்களின் பணி பாதுகாப்பிற்காக, வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வேண்டிய அவசியம் மற்ற ஊழியர்களை விட இவர்களுக்கே அதிகம் என்பதை உணர வேண்டும்.
இரண்டு நாள் சம்பளத்தை காப்பாற்றிக் கொள்ளும் ஒரே நோக்கில் மருத்துவ விடுப்பில் செல்லும் அறிவாளிகள், அவர்களது அடுத்தடுத்த மாத சம்பளத்திற்கும், ஆண்டாண்டுகள் வாங்கப்போகும் ஓய்வூதியத்திற்கும் ஆபத்து காத்திருக்கிறது என்பதை உணர வேண்டும்.
மருத்துவ விடுப்பை தவிர்ப்போம். 
நம்மை வாழ வைக்கும் நிறுவனத்தை காப்போம் !

No comments: