Friday, May 5, 2017

மலரட்டும் மண்ணுக்கேற்ற 

மார்க்ஸியம்!

*** தமிழ் ஹிந்து தலையங்கம்***


உற்பத்தியில் மூலதனத்தின் பங்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியத்துவம் உழைப்புக்கும் உண்டு. ஆனால், உபரியாகக் கிடைக்கிற லாபம் மூலதனத்தையே சேர்கிறது. உழைப்புக்குக் கிடைக்கும் பயன் கூலியாக மட்டுமே இருக்கிறது. அந்தக் கூலியும் அத்தியாவசியத் தேவையையும் பூர்த்திசெய்துகொள்ளப் போதுமானதாய் இருப்பதில்லை.

நிலவுடைமைச் சமுதாயம், ஆலை உற்பத்திக்கு மாறிய கால கட்டத்தில் தொழிலாளர்களின் ஒருங்கிணைவுக்கு ஒரு சாத்தியம் உருவானது. அந்த ஒருங்கிணைவு மூலதனத்துக்கும் உழைப்புக்கும் ஒருசேர மதிப்பளிக்கும், இரண்டையும் ஒன்றாக்கும் ஒரு சோஷலிச கனவுக்கு வித்திட்டது. அது வெறும் கனவு மட்டுமல்ல. மானுட வரலாற்றின் கால மாற்றங்களில் கட்டாயம் நடக்க வேண்டிய மாற்றம் என்பதை தனது மூலதனம் நூலில் அறிவியல்பூர்வமாக நிரூபணம் செய்தார் காரல் மார்க்ஸ். உற்பத்தி முறையின் மாற்றங்களுக்கு ஏற்ப, சமூகத்தின் சகல துறைகளிலும் மாற்றங்கள் ஏற்படும் என்பதையும் அவர் வரலாற்றுரீதியில் நிரூபித்தார்.

மார்க்ஸ் ஐரோப்பிய ஆலை உற்பத்தி முறையில் எதிர்பார்த்த சோஷலிச கனவு, ரஷ்யாவின் நிலவுடைமைச் சமுதாயத்தில் நிறைவேறி இடைநின்றுவிட்டது. அதேவேளையில் கியூபா, வெனிசுலா என்று உலகத்தின் பல நாடுகளும் சோஷலிச கனவை இயன்றவரைக்கும் நனவாக்கியுள்ளன. இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகள் கையில் மத்திய அரசு வரவில்லையென்றாலும், மார்க்ஸின் தாக்கம் நேருவிய காலகட்டத்திலேயே தொடங்கிவிட்டது. விளைவாக, இந்திராவின் ஆட்சிக்காலத்தில் அரசியலமைப்பின் விழுமியங்களில் ஒன்றாக அதன் முகப்புரையில் இடம்பெற்றது. ஆக, உலகில் மார்க்ஸ் தாக்கம் ஏற்படுத்தாத சமூகம் என்று ஒன்று இன்றில்லை எனலாம்.

முதலாளித்துவமானது சோஷலிசத் திட்டங்களுக்கு எதிராக தன்னைத் தக்கவைத்துக்கொள்வதில் முன்னெப்போதைக் காட்டிலும் மிகப்பெரிய வியூகங்களை வகுத்துக்கொண்டுள்ளது. காரல் மார்க்ஸின் அறைகூவலை தொழிலாளர் சமூகம் காதுகொடுத்துக் கேட்கும் முன்பே உலக முதலாளிகள் ஒன்றுகூடிவிட்டார்கள். இன்றைய நவீனப் பொருளாதார யுகத்தில், பண்டங்கள் என்பது உற்பத்திப் பொருட்கள் மட்டுமல்ல, சேவைப் பணிகள், கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை, தொழில்நுட்பம் என்று அதன் எல்லைகள் விரிவடைந்துகொண்டே போகின்றன. மூலதனம் இன்று தனிநபர் முதலீடு என்ற நிலையையெல்லாம் தாண்டி, பன்னாட்டு எல்லைகளில் விரவி நிற்கிறது. பங்கு முதலீடு என்ற கண்ணுக்குத் தெரியாத மாயக்கரங்களால் இன்றைக்கு உற்பத்தி ஆட்டிவைக்கப்படுகிறது. இந்தப் புதிய சூழலையும் மனதில் கொண்டுதான் இனி சோஷலிசத் திட்டங்கள் வகுக்கப்பட்ட வேண்டும்.

காரல் மார்க்ஸ் மூலதனத்தை எழுதிய நாட்களில் உலக வர்த்தக நிறுவனம் போன்ற முதலீடுகளைப் பாதுகாக்கும் அமைப்புகள் எதுவும் இல்லை. ஆனால் இப்போது உலக வர்த்தக நிறுவனம், பன்னாட்டு உடன்படிக்கைகளின் வழியாக, உலக நாடுகள் இயற்றும் சட்டங்களுக்கெல்லாம் முன்வரைவைத் தயாரித்து அளித்துக்கொண்டிருக்கிறது. விவசாயம் தொழில்துறையின் வசமாகிறது. விதைகளும் காப்புரிமையின்கீழ் பண்டங்களாக்கப்பட்டுவிட்டன. உற்பத்தியில் உழைப்பின் பங்கைக் காட்டிலும் முதலீடே முதன்மை வகிக்கிறது. இந்தப் புதிய பொருளாதாரச் சூழலில் காரல் மார்க்ஸ் தவிர்க்க முடியாதவராக இருக்கிறார். இந்தியாவில் இந்த மண்ணுக்கு ஏற்றதாக மார்க்ஸியம் மலரும் நாளில், இந்தியாவின் முழுமையான சோஷலிச கனவும் நிறைவேறும்.

No comments: