Sunday, April 29, 2012

மே தினம்!

18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.

மே 3, 1886 அன்று “மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலாளர்கள். 2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.



நவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். நவம்பர் 13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.


அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக - உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.

No comments: