Thursday, September 5, 2013


சுதேசிப் போர்க்கப்பல் தளபதி: வ.உ.சி - பிறந்த நாள் நினைவுகள்!

இந்தியாவின் சுதேசி வணிகர்கள் இப்படியாகத் திரைகடல் ஓடித் திரவியம் தேடிக் கொண்டிருந்தபோது வெள்ளையனை விரட்ட வேண்டும் என்றால் அவனை எதிர்த்துப் போட்டி வர்த்தகம் நடத்த வேண்டும் என்று ஒரு குரல் தூத்துக்குடியிலிருந்து உரத்துக் கூவியது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் வணிகரல்ல. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த வழக்குரைஞரான வ.உ.சிதம்பரம்.

""ஒரு பரிதாபத்துக்குரிய சுதந்திரப் போராட்டத் தியாகி. ஏதோ ஒரு உந்துதலில் வெள்ளையனுக்கு எதிராகப் போராடிச் சிறை சென்றவர்'' என்பது போன்ற தோற்றம் வ.உ.சி.யைப் பற்றி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. உண்மையில் அவர் மிகவும் திட்டமிட்டுச் செயல்பட்ட ஒரு விடுதலை வீரர். பிரிட்டிஷாருக்கு எதிரான நெருப்பாகவே வாழ்ந்தவர்.


""வெள்ளையனை விரட்டுவது என்றால் நம்மவர்க்குக் கடல் ஆதிக்கம் வேண்டும். எனவே தமிழர்கள் மீண்டும் கடல் மேல் செல்வது எவ்வாறு என்பதைத் திட்டமிட்டேன்'' என்று சுதேசிக் கப்பலுக்கான "விதை' பற்றிக் குறிப்பிடுகிறார் வ.உ.சி. சுதேசிக் கப்பல் என்பது வியாபாரம் அல்ல, அது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தின் வீரியமிக்க வடிவம் என்ற புரிதல் வ.உ.சி.க்கு இருந்தது. எனவே தன்னுடைய கம்பெனிக்கு மிகச் சாதாரண மக்களிடமெல்லாம் பங்கு வசூல் செய்தார் வ.உ.சி. 1906 அக்டோபர் 16ஆம் நாள் "சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி' என்ற பெயரில் சுதேசிக் கப்பல் நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. 1907 மே மாதம் "காலியோ, லாவோ' என்ற இரண்டு சுதேசிக் கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் மிதக்கத் தொடங்கின.

கிலி பிடித்த வெள்ளையர்களின் பிரிட்டிஷ் இந்தியன் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியும் (பி.ஐ.எஸ்.என்) பிரிட்டிஷ் அரசும் இணைந்த கைகளோடு சுதேசிக் கப்பலுக்கு எதிராகச் சதிகள் செய்ய ஆரம்பத்தன. தூத்துக்குடிக்கும் கொழும் புக்கும் இடையில் 5 ரூபாயாக இருந்த மூன்றாம் வகுப்புக் கட்டணத்தை 75 பைசாவாகக் குறைத்தது பி.ஐ.எஸ்.என் நிறுவனம். அடுத்த சதியாக, இந்திய இலங்கை ரயில்வே நிர்வாகம், பி.ஐ.எஸ்.என் நிறுவனக் கப்பல்களில் ஏற்றப்படும் சரக்குகளுக்கும் பயணிகளுக்கும் ரயிலில் கட்டணச் சலுகை என்று அறிவித்தது.

ஆனாலும் தேசப்பற்று மிக்க மக்கள் இந்த சதி நிறைந்த சலுகைகளைப் புறம் தள்ளி, வ.உ.சி.யின் சுதேசிக் கப்பல்களையே ஆதரித்தனர். அதனால் வெள்ளையன் கப்பல் நிறுவனத்திற்கு மாதம் 40,000 வரை நட்டம் ஏற்பட்டது. சுதேசிக் கப்பல் மக்களை அரசியல் படுத்தியது. பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்ட உணர்வை மக்கள் மனதில் விதைத்தது.

No comments: